Friday 26 August 2011

மகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்


பெண்களுக்கான பிரத்யேக வேலைவாய்ப்புத் தளம் அவசியமானது மட்டுமல்ல அழகானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் பெமி ஹயர் இணையதளத்தை மகளிருக்கு மிகவும் ஏற்ற இணையதளம் என்று சொல்லலாம்.
தோற்றத்தில் துவங்கி வடிவமைப்பு வரை இந்த தளம் அழகானதாக காட்சி அளிக்கிறது. இதன் உள்ளடக்கமோ அதைவிட சிறப்பாக, எளிமையின் உறைவிடமாக திகழ்கிறது.
வறுமையின் நிறம் சிவப்பு என்று சொல்வதைப்போல, பெண்மையின் நிறம் பிங்க் என்று ஒரு கருத்தும் இருக்கிறது. அதற்கு ஏற்ப இந்த இணையதளம் பிங்க் நிற பின்னணியில் வரவேற்கிறது.
சுருக்கமான அறிமுகத்தைத் தவிர இந்த தளத்தில் அதிக விவரங்கள் கிடையாது. அறிமுகமும் மிக அழகாகவே இருக்கிறது.
வேலை எனும் வார்த்தைக்கு பதில் வேட்கை எனும் வார்த்தையே பிரதானமாக இந்த தளத்தில் இடம் பெற்றுள்ளது. ஒருவர் தனக்கு மிகவும் பிடித்த துறையில் வேலையைத் தேடிக் கொண்டால் அது இன்பமானதாகவும், விளையாட்டுத்தனம் மிக்கதாகவும் இருக்கும் என துவங்கும் அறிமுக உரை அத்தகைய வேட்கை மிக்க வேலைவாய்ப்பை இங்கே தேடிக் கொள்ளுங்கள் என்று வழிகாட்டுகிறது.
உங்கள் வேட்கையை தொடர்வதன் மூலம் வாழ்க்கைக்கான வருமானத்தை தேடிக் கொள்ளவும் என்றும், உற்சாகம் அளிக்கிறது. வெறும் வேலை வாய்ப்பு தேடலுக்கானது மட்டுமல்ல. பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி அதற்கேற்ற வேலைவாய்ப்பை தேடிக் கொள்வதற்கான மேடையாகவும் திகழ்வதாக, இந்த தளம் தன்னைப்பற்றி பெருமிதத்தோடு கூறிக்கொள்கிறது.
ஒரு விதத்தில் இந்த  தளத்தின் சிறப்பு அம்சமும் இதுதான்.
வேலை தேடிக் கொண்டிருக்கும் பெண்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான களமாகவும் இந்த தளம் அமைகிறது.
இதன் மூலம் ஏற்கனவே பணியில் உள்ள பெண்களின் கருத்துக்கள் மற்றும் வழிகாட்டுதலை புதியவர்கள் தர முடியும். அந்த வகையில் பெண்களுக்கான உலகளாவிய பகிர்வு தளமாக இதனை உருவாக்கிஇருப்பதாக கரிஷ்மா தாஸ்வனி கூறுகிறார்.
இவர் தான் இந்த தளத்தை உருவாக்கியவர். வர்த்தக நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருந்த அவர், காலை முதல் மாலை வரை பார்க்கக்கூடிய வேலையில் தனக்கான சுதந்திரத்தையும், உற்சாகத்தையும் எதிர்பார்க்க முடியாது என்ற உணர்வோடு அந்த வேலையை உதறி தள்ளிவிட்டு பெண்களுக்கு வேலைவாய்ப்பில் வழிகாட்டும் இந்த இணைய தளத்தை உருவாக்கி இருக்கிறார்.
வேலைவாய்ப்பு தேடலில் பெண்களுக்கு வழிகாட்டுவதற்காக மிக எளிமையான வடிவமைப்போடு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
முகப்பு பக்கத்தில் அறிமுக குறிப்புக்கு கீழே இரண்டே இரண்டு வட்டங்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்று, பயோடேட்டாவை சமர்ப்பிப்பதற்காக, மற்றொன்று வர்த்தக நிறுவனங்கள், வேலைவாய்ப்பை வெளியிடுவதற்காக.
இரண்டு பகுதியிலுமே குறைந்தபட்ச விவரங்களை சமர்ப்பித்தால் போதுமானது. பொதுவாக வேலைவாய்ப்பு தளங்களில் பார்க்கக்கூடியது போல அடுக்கடுக்கான கட்டங்களோ, கூடுதல் விவரங்களோ இல்லாமல் இந்த தளம் மிக எளிமையாக காட்சி அளிக்கிறது.
தளத்திற்கு வருகை தரும் பெண்கள் தங்களுக்குள் கருத்து பரிமாற்றத்தை செய்து கொள்வதே பிரதான நோக்கம் என்பதால் அதற்கு உதவும் வகையில் டிவிட்டர், பேஸ்புக் மற்றும் இமெயில் வாயிலாக தொடர்பு கொள்வதற்கான எளிய வழிகளும் இடம் பெற்றுள்ளன. எல்லா வற்றையும் ஒரே கிளிக்கில் சாதித்துக் கொள்ளலாம்.
————-

பேட்டி தர நீங்கள் தயாரா?அழைக்கும் இணையதளம்.


பிரபலங்கள் மட்டும் தான் பேட்டி கொடுக்க வேண்டுமா என்ன!நீங்களும் தான் பேட்டி தரலாம் என்கிறது டைப்கேஸ்ட் இணையதளம்.
பேட்டி தர விருப்பம் தான் ஆனால் பேட்டிக்கான கேள்விகளை கேட்க யாராவது வேண்டாமா என்று கேட்டால் அதற்கான வழியையும் இந்த தளமே காட்டுகிறது.
மிகவும் சுவாரஸ்யமான சேவை தான்.எளிமையானதும் கூட.
யார் வேண்டுமானாலும் உங்களை பேட்டி காண வழி செய்யும் சேவை என்று பெருமை பட்டு கொள்லும் டைப்காஸ்ட் ஒருவர் தனது ரசிகராலோ நண்பர்களாலோ அல்லது வாசகர்களாலோ பேட்டி காணப்பட வழி செய்கிறது.அதிலும் எப்படி தெரியுமா,நேரடி பேட்டிக்கு வழி செய்கிறது.
பேட்டிக்கு நான் தயார் என ஆர்வம் கொள்பவர்கள் இந்த தளத்தில் உறுப்பினராக வேண்டும்.பெயரையும் இமெயில் முகவரியையும் சம்ர்பித்து உறுப்பினரான பின் பேட்டிக்கான பக்கம் அளிக்கப்படுகிறது.அந்த பக்கத்தில் பேட்டிக்கான தலைப்பு மற்றும் விளக்கத்தை குறிப்பிட்டு பேட்டிக்கு ஆயுத்தமாகலாம்.பேட்டி காணப்பட விரும்பும் நேரத்தையும் குறிப்பிடலாம்.(எப்போது வேண்டுமானாலும் நேரத்தை மாற்றிக்கொள்ளலாம்)
இதன் பிறகு உங்கள் வலைப்பதிவினிலோ அல்லது பேஸ்புக் பக்கத்துலோ இந்த இணைப்பை சமர்பித்து நண்பர்களையும் வாசகர்களையும் கேள்வி கேட்க அழைக்கலாம்.குறிப்பிட்ட நாள் அன்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம்.கேள்விகளை வாக்குகலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது.
வலைபதிவாளர்கள்,மாணவர்கள் என்று யார் வேண்டுமானாலும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.ஒரு பயனுள்ள பதிவை எழுதிய பின் அந்த மைய பொருள் தொடர்பாக விவாதிக்க விரும்புகிறவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.பேட்டியை வலைப்பதிவிலும் இடம் பெறச்செய்யலாம்.
அதே போல குறிப்பிட்ட தலைப்பு குறித்து நண்பர்களோடு கருத்துக்களை பகிர இரும்பினாலும் இதனை பயன்படுத்தலாம்.மாணர்கள் ஆசிரியர்களோடு உரையாடவோ அல்லது ஆசிரியர்கள் மாணவர்களோடு உரையாடவோ இதனை பயன்படுத்தலாம்.
கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக இருக்கும் எவர் வேண்டுமாலும் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.
வலைப்பதிவுகளும்,டிவிட்டர் போன்ற சாதனங்களும் கருத்துக்களை வெளியிடும் வாய்ப்பை எல்லோருக்கும் ஏற்படுத்தி தந்துள்ள நிலையில் டைப்கேஸ்ட் சேவை பதிவர்களும் பேஸ்புக் பயனாளிகளும் பேட்டி காணப்படும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
வலைப்பதிவில் பின்னூட்டம் மூலம் அல்லது பேஸ்புக்கில் கருத்துக்கள் மூலம் உரையாடுவதை விட இப்படி பேட்டி வழியே கருத்துக்களை பகிர்ந்து கொள்வது சிறந்ததாக இருக்கும்.
இணையத்தின் ஆற்றலை பயன்படுத்தி கொள்ளும் புதுமையான முயற்சி.ஆனால் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று தெரியவில்லை.
இணையதள முகவரி

FINLAND ( IMAGES )