Monday, 29 August 2011

இணையதளங்களை கண்காணிக்க ஒரு இணையதளம்.


இன்டெர்நெட்டை திரும்பி பார்க்க உதவும் வேபேக் மெஷின் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.இணையதளங்களின் கடந்த கால தோற்றங்களை சேமித்து வைக்கும் இந்த தளத்தை இணையத்தின் கால் இயந்திரம் என்றும் சொல்கின்றனர்.
ஒரு இணையதளம் குறிப்பிட்ட காலத்திற்கு முன் எப்படி இருந்தது என்று அறிய விரும்பினால் இந்த இயந்திரத்தின் மூலம் காலத்தில் பின்னோக்கி சென்று அந்த தளத்தின் அப்போதைய தோற்றத்தை பார்க்க முடியும்.
இந்த தளத்தை எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.ஆனால் புதிதாக அறிமுகமாகியிருக்கும் டெய்லி ஸ்கிரீன்ஷாட் தளத்தை பார்க்கும் போது இந்த தளமே நினைவுக்கு வருகிறது.
டெய்லி ஸ்கிரீன்ஷாட் இணையதளம் குறிப்பிட்ட இணையதளங்களின் தோற்றத்தை பின் தொடர உதவுகிறது. அதாவது அந்த தளத்தை தினந்தோறும் கண்காணிக்க வழி செய்கிறது.
எந்த தளத்தை பின் தொடர விருப்பமோ அந்த தளத்தின் முகவரியை சமர்பித்தால் இந்த தளமானது அந்த தளத்தின் தோற்றத்தை தினந்தோறும் படம் பிடித்து காட்டுகிறது.இணையதள தோற்றத்தை அப்படியே படம் பிடித்து ஸ்கிரின் ஷாட்டாக பார்க்கலாம் அல்லாவா,அதே போலவே தளங்களின் ஸ்கிரின் ஷாட்டை சேமித்து வைக்கிறது இந்த தளம்.
இதன் மூலம் எந்த ஒரு இணையதளத்தில் ஏற்படும் மாற்றத்தையும் கண்காணித்து கொண்டே இருக்கலாம்.
இந்த சேவையை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.சொந்தமாக இணையதளம் வைத்திருப்பவர்கள் தங்கள் தளங்களின் பரிணாம வளர்ச்சியை இதன் மூலம் பின் தொடரலாம்.இணைய தள வடிவமைப்பாளர்களும் தாங்கள் உருவாக்கிய தளங்களின் செய்லபாட்டை அறிய இதனை பயன்படுத்தலாம்.
வர்த்தக நிறுவனங்கள் போட்டி நிறுவங்களின் தளங்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும் இதனை பயன்படுத்தலாம்.
இணையவாசிகளும் தங்கள் அபிமான தளங்களின் தோற்றத்தை தினமும் கண்காணிக்கலாம்.ஆனால் கட்டண சேவை என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.
இணையதள முகவரி;http://dailyscreenshot.com/